முன்னர் குறிப்பிட்டவாறு புத்தர் தனது வாழ்நாளில் வட இந்தியாவை விட்டு வேறு எங்கும் பயணம் செய்யவில்லை. தென்னாட்டுக்குக் கூடப் புத்தர் வந்ததாக வரலாறு இல்லை. இலங்கை தொன்று தொட்டு ஒரு பவுத்த நாடென்றும் அந்த நாட்டுக்கு புத்தர் வருகை தந்து அதனைப் புனிதப்படுத்தினார் என்பதை நிறுவவே மகாவம்ச ஆசிரியர் இந்தக் கதைகளை கட்டியுள்ளார்.
புத்தர் மூன்றாவது தடவை இலங்கைக்கு வந்துசென்று 37 ஆண்டுகள் கழிந்த பின்னர்தான் விஜயன் இலங்கைக்கு வந்தான் என்பது மகாவம்சத்தின் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. எனவே, சிங்களவர்களின் முன்னோடியான விஜயன் வருவதற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே இலங்கைத்தீவு முழுவதும் நாகர்கள் வடக்கிலும் வடமேற்கிலும் இயக்கர் தெற்கிலும் சிறப்புற வாழ்ந்து ஆட்சி நடத்தி வந்தார்கள் என்பது தெளிவாகிறது.
விஜயன் சந்ததி இல்லாத இறந்த போது நாக வம்சத்தைச் சார்ந்த அரசர்களே கிபி 11 ஆம் நூற்றாண்டு வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளார்கள். அவர்களது பெயர்கள் நாக என்ற பின்னொட்டோடு முடிகிறது.
மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என தரச்சர், லம்புக்காணர் (முயல் அல்லது ஆடு), பாலிபோஜகர் (காகம்), மோரியர் (மயில்), புலிந்தர் இவர்களைக் குறிப்பிடுகிறது. மகாவம்சத்தின் கதைப்படி வேடர் விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த பிள்ளைகள் எனச் சொல்லப்பட்டுள்ளது. சிங்களவர் காலத்தால் வேடர்களுக்கு முந்தியவர்கள் எனக் காட்டவே மகாவம்ச ஆசிரியர் இந்தப் புனைந்துரையைப் புகுத்தியுள்ளார்.
“வேடர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறிய ஆரியர்களோடு நாளடைவில் மணவுறவு மூலம் கலந்தார்கள் என” இலங்கையின் பழைய வரலாறு” என்ற நூலில் ஜி.சி. மென்டிஸ் குறிப்பிடுகிறார். கண்டிச் சிங்களவர் தென்புலத்தோர்க்குப் படையல் படைக்கும் வழக்கம் வேடர்களது கலப்பினால் ஏற்பட்டதென கலாநிதி செலிக்மன் அபிப்பிராயப் படுகிறார்.
இந்த நாகர்கள், இயக்கர்கள், வேடர்கள் ஆதிதிராவிட இனமக்கள் என்பதும் அவர்கள் சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. சங்ககாலப் புலவர்களில் சிலர் வேடர் மற்றும் நாகர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
இப்போது குடாநாடாக விளங்கும் யாழ்ப்பாணம் முன்னொரு காலத்தில், அதாவது கிறித்து பிறப்பதற்கு அநேக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு தீவுகளாக இருந்தது. மேற்கே நாகதீபம், மணிநாகதீபம், மணிபுரம், மணிபல்லவம் என்னும் பெயர்களால் வழங்கப்பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமை முல்லைத்தீவு என்று பெயர்பெற்ற சிறுதீவும் இருந்தன.
இவை காலத்துக்குக் காலம் இடம்பெற்ற கடற்கோள்களினால் பெரும்பகுதி அழிந்து போயின. இன்று யாழ்பாணக்குடா நாட்டைச் சுற்றியிருக்கும் புங்குடுதீவு, அனலைதீவு, மண்டைதீவு போன்ற தீவுகள் அப்பெருந்தீவகத்தின் மிஞ்சிய பகுதிகளேயாகும்.
கிமு 10 ஆம் நூற்றாண்டளவில் வட இந்தியாவை ஆண்ட பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது இன்றைய கீரிமலையான நகுலமலையைக் கொண்ட மணிபுரத்துக்கு வந்தானென்றும் அந்த நாட்டு நாக அரசனனின் மகள் சித்திராங்கதையைக் கண்டு காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்தானென்றும் பாரதக்கதையில் சொல்லப்படுகிறது. அருச்சுனன் – சித்திராங்கதை இருவருக்கும் பிறந்த சித்திரவாகன் என்பான் தனது தந்தையாகிய அருச்சுனனைப் போரில் வென்றான் என்றும் அவனது கொடி சிங்கக் கொடி என்பதும் மகாபாரதத்தால் அறியப்படும்.
நாகர்கள் வரலாறு இலங்கையில் ஆதியில் வாழ்ந்த இயக்கர், நாகர் என்பார் மனித வர்க்கத்தினரைச் சேர்ந்தவரல்லர் என்ற கருத்துப் பொதுவாக வரலாற்று ஆசிரியர்களிடையே நிலவி வந்துள்ளது. எனினும், இலங்கையின் வரலாற்றை ஆராய்பவர்கள் இந்த இரு இனத்தைச் சேர்ந்தவர்களே இலங்கையின் ஆதிக் குடிகள் என்ற முடிவுக்கு வருவார்கள். சிறப்பாக இயக்கர் என அழைக்கப்பட்டோர். இராவணன் இயக்க குல அரசன் என்பது இராமாயணம் போன்ற இதிகாசங்களால் அறியப்படும்.
நாகர்கள், இயக்கர்கள் என்பவர் யார் என்பதுபற்றி அறிஞர்களிடையே ஒருமைப்பாடு இன்னமும் ஏற்படவில்லை. தென்னிந்தியாவிலே திராவிட இனப்பண்பாட்டோடு தொடர்புடைய பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. நாகர்களும் இயக்கர்களும் திராவிடர்களாக – தமிழர்களாக – இருக்கவேண்டும் என்ற கருதுகோள் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவின் வடகீழ் எல்லைப்புறத்திலே, நாகர்கள் என்ற மங்கோலியத் தொடர்புள்ள இனத்துக்கு நாகலாந்து என்று தனிமாநிலம் காணப்படுகிறது. வரலாற்றுக்காலத்துக்கு முன்பும் வரலாற்றுக்காலத்திலும் நாகர்களைப் பற்றிய பல குறிப்புகள் இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்தும் கிடைக்கின்றன. நாகமன்னர்கள் ஆரியமன்னர்களோடும் திராவிடமன்னர்களோடும் வேறுபாடுகாட்டாது கலப்புகளை ஏற்படுத்தி வந்துள்ளனர். பண்டைக்காலத் தமிழக்கத்திலே சேரநாடு என்று பெயர்பெற்றிருந்த நிலப்பரப்பின் பெரும்பகுதியாக அமைந்து, இன்று தமிழோடு ஒப்புமைகள் பலவற்றைக் கொண்டுவிளங்கும் மலையாள மொழி வழங்கும் கேரளா மாநிலத்தில் நாயர் என்ற சமூகத்தினர் வாழுகின்றனர். நாகபாம்பு வழிபாட்டின் எச்சசொச்சங்கள் அவர்களிடையே இன்றும் கானப்படுகின்றன. நாகர் என்ற சொல் நாயர் என்று திரிந்து வழங்குகிறதெனக் கொள்ளலாம்.
நாகர், இயக்கர் இனங்களே இலங்கையின் வரலாற்றைத் தொடங்கி வைத்தவர்கள் என்ற கருத்தைக் கல்வெட்டு ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன. மகிந்தன் (கி.பி. 956 – 972) கல்வெட்டொன்று மகிந்த தேரரால் வெல்லப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட இயக்கர்களால் காவல் செய்யப்பட்ட திசவாபி பற்றிக் குறிப்பிடுகின்றது. மேலும் கர்மவிபங்க எனும் சமஸ்கிருதப் பவுத்த நூலும் இயக்கர்களை மகிந்த தேரர் வென்றார் எனக் குறிப்பிடுகின்றது. சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூறும் (71:14) இயக்கன் என்ற சொல்லை ஆட்பெயராக, மக்கள் பெயராகக் குறிப்பிடுகின்றது.
நாகர் வடக்கே இமயம் வரையும் தெற்கே இலங்கை வரையும் கிழக்கே பர்மா முதலிய தென்கிழக்காசிய நாடுகள் கடந்து பசிபிக் தீவுகள் வரையும் பரவியிருந்தனர். அவர்கள் வகுத்த எழுத்து முறையே நாகரி – நகரி என்ற பெயரிலும் தேவநாகரி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. வடதிசைச் சமஸ்கிருதமும், பிற வடதிசைத் தாய்மொழிகளும் எழுதப்படும் எழுத்து வடிவு இதுவே.
நாகர் என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர். நாகர்களின் நாடு நாகரிகமும் செல்வ வளமும் நிரம்பியது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. நாகர்கள் நாகபாம்பை வழிபட்டு வந்தவர்கள். இயக்கர்கள் இறந்த மூதாதையரை வழிபட்டு வந்தவர்கள். அச்சத்தின் காரணமாக இந்த வழிபாடு தொடங்கி இருக்கலாம். இந்த வழிபாடு தமிழர்கள் மத்தியிலும் பரவலாகக் காணப்படுகின்றது.
மேலே குறிப்பிட்டவாறு சங்க காலத்தில் நாகர் இனத்தைச் சேர்ந்த பல புலவர்கள் இருந்திருக்கிறார்கள். புறத்திணை நன்னாகனார், மருதன் இளநாகனார், முரஞ்சியூர் முடிநாகராயர், வெள்ளைக்குடி நாகனார், சங்கவருணர் போன்றவர்களைக் குறிப்பிடலாம். முடிநாகர் இனத்தைச் சேர்ந்த முரஞ்சியூர் முடிநாகராயர் சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியிருக்கிறார். இவர்கள் நாகவுருவைத் தலையில் அணிந்ததால் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோயில் நாகபாம்பையே மூலவராகக் கொண்ட கோயில் ஆகும். தமிழ்நாட்டில் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள கருமாரியம்மன் கருநாகமாக தோன்றினார் என்று தலபுராண வரலாறு கூறுகிறது. இங்கு கருமாரியம்மன் அய்ந்து தலை நாகத்தின் குடை நிழலில் அமர்ந்து காட்சி தருகிறார். திருச்செங்கோடு மலைச்சரிவில் 60 அடி நீளத்தில் பாம்பு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்துகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சமுதாயத்தினர் நாகத்தை குலதெய்வமாக கொண்டு ஒடுப்பறை என்ற இடத்தில் கோயில் கட்டி வழிபடுகின்றனர்.
மறவர், ஒளியர், எயினர், ஓவியர், அருவாளர், பரதவர் என்போர் பழம் நாகக்குடி வழிவந்த தமிழ்க் குடிகளே ஆவர். தமிழக வரலாற்றின்படி நாகர்கள் சங்க காலத்துக்குப் பின் பழந்தமிழ்க் குடிகளுடன் ஒன்று கலந்துவிட்டனர்.
நாகர் வழிபாட்டு முறைமை சைவ மதத்துடன் ஒன்று கலக்க ஆரம்பித்தன. மேலும் இலங்கை நாகர்கள் தமிழக அரசுகளுடன் தொடர்புடையவர்கள் என்பதை மகாவம்சம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
மகாவம்சம் மட்டுமின்றி தொலமியின் இலங்கைப் படத்தின் புவியியல் குறிப்புகளும் சான்றுகளாக அமைகின்றன. தொலமியின் புவியியல் படத்தின் படி இலங்கையின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்குப் பகுதியூடாக தென்கிழக்குப் பகுதிவரை நாகர்கள் தம் செல்வாக்கை நிலைநாட்டியிருந்தனர் என்பது தெரிகின்றது. அன்று நாகர்களும் பழந்தமிழர்களும் பரவி வாழ்ந்த பகுதிகளே இன்றும் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் தமிழ்ப் பகுதிகளாகக் காணப்படுகின்றன.
‘நாகநாட்டு நாக அரசன் வலைவாணன் என்பவன் மகள் பீலிவளை என்பவளைச் சோழநாட்டு மன்னன் வடிவேற்கிள்ளி காதல் மணம் புரிந்தான்’ என்கிறது மணிமேகலை. அதே மணிமேகலை சாவக நாட்டை ஆண்ட பூமிசந்திரனும் அவன் வளர்ப்பு மகனான புண்ணிய ராசனும் நாக மரபினர் என்று கூறுகிறது.
மணிமேகலை ஆதிரையின் கணவன் சாதுவன் பற்றிய கதையைக் கூறுகிறது. அவன் தீய ஒழுக்கம் கொண்டு கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய பொருள் தீர்ந்த பின் கணிகை அவனை வீட்டை விட்டு வெளியேற்றினாள். சாதுவன் பொருள் ஈட்டுவதற்காக வணிகர்களுடன் கப்பலில் சென்றான். கடும் காற்றால் கப்பல் கவிழ்ந்தது. சாதுவன் தப்பி நாகர்கள் வாழும் மலைப்பக்கம் சேர்ந்தான். கப்பலில் தப்பிய சிலர் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். சாதுவன் உயிரோடு இருப்பதை அறியாத அவர்கள் அவன் இறந்து விட்டதாகக் கூறினர். அதனைக் கேட்ட ஆதிரை தீயில் பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள். தீயில் குதித்தாள். ஆனால் தீ அவளைச் சுடவில்லை. ஆதிரை ‘தீயும் சுடாத பாவியானேன்’ என்று வருந்தினாள். அப்போது ‘உன் கணவன் இறக்கவில்லை. விரைவில் திரும்புவான்’ என அசரீரி கேட்டது. ஆதிரை மகிழ்ச்சியோடு வீடு திரும்பி நல்ல அறங்களைச் செய்து வந்தாள்.
கடல் கொந்தளிப்பிலிருந்து உயிர்தப்பி நாகர்மலையைச் சென்றடைந்த சாதுவனை நாகர்கள் பிடித்து அவனை உண்ண முயன்றனர். சாதுவன் நாகர்மொழியை அறிந்திருந்ததால் நாகர்களின் தலைவனோடு பேசி அவர்களுக்குக் கொல்லாமை அறத்தை அறிவுறுத்தினான். நல்வினை, தீவினை ஆகியன பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான். நல்லறிவு பெற்ற நாகர் தலைவன், சாதுவனுக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தந்தான். அவற்றைப் பெற்று அங்கு வந்த சந்திரதத்தன் கப்பலில் சாதுவன் மீண்டான். ஆதிரை கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.
நாலைக்கிழவன் நாகன் என்ற மறவர் கோமான், பாண்டிய அரசனிடம் அமைச்சனாகவும் அவன் படைகளின் தலைவனாகவும் பணியாற்றினான். குதிரை மலையை ஆண்ட பிட்டங்கொற்றன் என்ற மற்றொரு தலைவன் சேர அரசனிடம் பணியாற்றினான்.
பரதவர் கடற்கரையில் மீன் பிடித்தும் வணிகம் செய்தும் வாழ்ந்த நாக வகுப்பினர் ஆவர். அவர்கள் முத்தும் சங்கும் எடுக்கக் கடலில் மூழ்கினர். அவர்கள் தென்பாண்டி நாட்டில் கொற்கையைச் சூழ்ந்த இடத்திலேயே மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள். நாகர்கள் பல கலைகளில் திறமையுடையவர்கள். குறிப்பாக நெசவுக் கலையில் கலிங்கநாட்டு நாகர் புகழ் பெற்றிருந்தனர்.
நாகர்கள் ஒரு காலத்தில் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய பரப்பின் பெரும்பகுதியையும் ஆண்டார்கள். அவர்கள் இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கில் உள்ள நாகலாந்து நாகர்களது சொந்த நாடாகும்.
நாகர், நாகம், நாகரிகம் போன்ற சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்களே. நாகர் நாடு என்பது குமரிக்கண்டத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து பின்னர் அடுத்தடுத்து நிகழ்ந்த கடற்கோள்களால் அழிந்துபட்டது என்பதைப் பல்வேறு தமிழிலக்கியங்கள் வாயிலாக அறியலாம். கீழ்த்திசையிலிருந்த நாகர் நாடு பற்றி மணிமேகலை, நாகத்தை வழிபட்டும் நாக இலச்சினையைக் கொண்டிருந்தும் வாழ்ந்திருந்தவர் என்று கூறுகின்றது.
நகரம்-நாகரிகம்-நாகம்-நாகர் போன்ற அனைத்துத் தமிழ்ச் சொற்களும், நகர் என்ற மூலத்தமிழ்ச் சொல்லினின்று பிறந்தவைகளே. நாகர்கள், அழிந்துபட்ட நாகநாட்டுத் தமிழ் மக்களின் இன வழியினரேயாவர்.
அக்காலத்தில் வட இந்தியாவில் வாழ்ந்து வந்த திராவிட இனத்தாருக்கு அசுரர் என்று பெயர் இருந்தது. அசுரர்களில் ஒரு பிரிவினர் நாகர் என்பவர். நாகர் ஆதிகாலத்தில் தமிழ்நாட்டிலும் இருந்ததைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். அசுரரும், அவரில் ஒரு பிரிவினரான நாகரும் வருணன் என்னும் தெய்வத்தை வழிபட்டனர்.
முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் முடிநாகர் சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியதை குறிப்பிடுகின்றனர். இவர்கள் நாகவுருவை தலையில் அணிந்ததால் இவர்கள் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர். (வளரும்)
No comments:
Post a Comment